கர்நாடகத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வீட்டு தனிமையில் சிகிச்சை


கர்நாடகத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வீட்டு தனிமையில் சிகிச்சை
x
தினத்தந்தி 3 Sept 2020 5:03 AM IST (Updated: 3 Sept 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அஞ்சலி நிம்பால்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா, 7 மந்திரிகள், 6 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என நேற்று முன்தினம் வரை மக்கள் பிரதிநிதிகள் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெலகாவி மாவட்டம் கானாப்புரா தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் அஞ்சலி ஹேமந்த் நிம்பால்கர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் டாக்டரும் ஆவார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஞ்சலி நிம்பால்கர் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் அஞ்சலி நிம்பால்கர் எம்.எல்.ஏ., அவரது மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்தது.

59 ஆக உயர்வு

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அஞ்சலி நிம்பால்கர் எம்.எல்.ஏ.வுக்கு காய்ச்சல், சளி தொல்லை இருந்தது. மேலும் கொரோனா அறிகுறியும் தென்பட்டதால் அஞ்சலி நிம்பால்கர் எம்.எல்.ஏ. தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார். இந்த நிலையில் நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் அஞ்சலி நிம்பால்கர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அஞ்சலி நிம்பால்கருடன் சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story