வேலூரில் பஸ்கள் இயக்கப்பட்ட பின்னரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக விளங்கும் - பழைய பஸ் நிலையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


வேலூரில் பஸ்கள் இயக்கப்பட்ட பின்னரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக விளங்கும் - பழைய பஸ் நிலையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2020 8:49 PM IST (Updated: 4 Sept 2020 8:49 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்கள் இயக்கப்பட்ட பின்னரும் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும் இடமாக வேலூர் பழைய பஸ்நிலையம் காணப்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்கள் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. வேலூர் புதிய பஸ்நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்காரணமாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, கணியம்பாடி, அடுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களும் இங்கிருந்து தான் புறப்பட்டு சென்றன.கொரோனா காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் பழைய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதனால் சாரதிமாளிகை, நேதாஜி மார்க்கெட்டிற்கு வந்தவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அங்கு நிறுத்தி சென்றனர். வாடகை கொடுக்காத வாகனங்கள் நிறுத்தும் இடமாக பஸ்நிலையத்தை பலர் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வேலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிற இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இங்கிருந்து பஸ் ஏறி செல்கிறார்கள். பொதுமக்களின் கூட்டம், பஸ்களின் இயக்கம் என்று தற்போது பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. ஆனாலும் பலர் ஏற்கனவே நிறுத்தி சென்றதை போன்று தற்போதும் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்களை நிறுத்தி செல்கிறார்கள். பஸ்கள் நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் டிரைவர்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

சில ஆட்டோ டிரைவர்கள் பஸ்நிலையத்தின் உள்ளே சென்று பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். பழைய பஸ் நிலையம் வாகன நிறுத்தும் இடமாக மாறுவதை தடுக்க இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றை நிறுத்த தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story