உடன்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா


உடன்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Sept 2020 12:03 AM IST (Updated: 5 Sept 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டார பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதார துறையினர், தூய்மை பணியாளர்கள் பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உடன்குடி சுல்தான்புரத்தைச் சேர்ந்த 53 வயது ஆண், 58 வயது பெண், நேதாஜி நகரைச் சேர்ந்த 60 வயது பெண், செட்டியாபத்தைச் சேர்ந்த 64 வயது ஆண், உடன்குடி அனல் மின்நிலையத்தில் வேலை செய்யும் 45 மற்றும் 46 வயது ஆண்கள் ஆகிய 6 பேருக்கு புதியதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட உடன்குடி அரசு ஆஸ்பத்திரி, பஞ்சாயத்து அலுவலகம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின், டாக்டர்கள் ஜெயபரணி, அய்யம் பெருமாள், சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர் சேதுபதி மற்றும் கிராம சுகாதார பணியாளர்கள் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

அபராதம் விதிப்பு

இதுபற்றி வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் கூறுகையில், உடன்குடி வட்டார பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். முககவசம் இல்லாமல் வருபவர்களிடம் முககவசம் அணி வற்புறுத்துங்கள். இதைப்போல சமூக இடைவெளி மிக முக்கியம் ஆகும். ஒருவருக்கு ஒருவர் பேசும் போது குறைந்த பட்சம் 3 அடி இடைவெளியாவது இருக்க வேண்டும். முககவசமும் சமூக இடைவெளியும் கடை பிடித்தாலே கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்றார்.

மேலும் உடன்குடி நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாபு மற்றும் ஊழியர்கள், முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர்.

Next Story