ஒரே நாளில் புதிய உச்சமாக புதுச்சேரியில் கொரோனாவுக்கு 20 பேர் பலி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு புதிதாக தொற்று பாதிப்பு


ஒரே நாளில் புதிய உச்சமாக புதுச்சேரியில் கொரோனாவுக்கு 20 பேர் பலி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு புதிதாக தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2020 2:29 AM IST (Updated: 5 Sept 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது. ஒரேநாளில் புதிய உச்சமாக நேற்று கொரோனாவுக்கு 20 பேர் பலியானார்கள். புதிதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது.

20 பேர் உயிரிழப்பு

புதுவை மாநிலத்தில் முதலில் நகரில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தது. தொடர்ந்து கிராமப்புறங்களிலும் அதன் தாக்கம் தலை தூக்கியது. இதை தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தொற்று பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 1,800 பேர் வரை சோதனை செய்யப்படுகின்றனர்.

இதன் காரணமாக நாள்தோறும் 500 நோயாளிகள் வரை கண்டறியப்பட்டு வருகின்றனர். இதேபோல் தொற்று பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதுவை மாநிலத்தில் 1,846 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுவை 525, காரைக்கால் 18, ஏனாம் 44, மாகி 4 என 591 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 17 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 2 பேர் என ஒரே நாளில் அதிகபட்சமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது.

பலியானவர்கள் விவரம்

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கோர்க்காடு புதுநகரை சேர்ந்த 55 வயது பெண்ணும், காக்காயந்தோப்பை சேர்ந்த 54 வயது பெண்ணும், பிம்ஸ் ஆஸ்பத்திரியில் லாஸ்பேட்டையை சேர்ந்த 75 வயது முதியவரும், ஜிப்மரில் கோவிந்தசாலையை சேர்ந்த 50 வயது ஆண், முத்திரையர்பாளையம் சேரன் நகரை சேர்ந்த 81 வயது முதியவர், ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்த 50 வயது ஆண், வம்பாகீரப் பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 50 வயது ஆண், திரவுபதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த 79 வயது மூதாட்டி, வைத்திக்குப்பத்தை சேர்ந்த 46 வயது ஆண், மூலக்குளம் பசும்பொன் நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ஆகியோரும், மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரும், கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதுவை பழைய பஸ் நிலைய பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர், வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த 55 வயது ஆண், மூலக்குளம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த 62 வயது மூதாட்டி, புதுவை பாரதி வீதியை சேர்ந்த 52 வயது பெண்ணும், உருளையன்பேட்டை அன்னை இந்திரா நகரை சேர்ந்த 52 வயது ஆணும், தட்டாஞ்சாவடி நவசக்தி நகரை சேர்ந்த 80 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் ஏனாமில் 53 மற்றும் 36 வயது பெண்களும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் காரைக்கால் பெரியார் நகரை சேர்ந்த 69 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

280 பேர்

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 80 ஆயிரத்து 201 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 62 ஆயிரத்து 654 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 16 ஆயிரத்து 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 218 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,801 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 417 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 ஆயிரத்து 674 பேர் குணமடைந்து உள்ளனர். ஒட்டுமொத்தமாக 280 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அதாவது புதுச்சேரியில் 236 பேரும், காரைக்காலில் 16 பேரும், ஏனாமில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர். மாகியில் இதுவரை உயிரிழப்பு இல்லை. புதுவையில் உயிரிழப்பு என்பது 1.73 சதவீதமாகவும், குணமடைவது 66 சதவீதமாகவும் உள்ளது.

முன்னாள் அமைச்சர் பலி

சாமான்யர்களை மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. புதுவையில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ.க்களான பாலன் (என்.ஆர்.காங்கிரஸ்) எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் (மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாநில தலைவர்) ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜெயபால் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் மீண்டனர்.

இந்தநிலையில் முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான பாஸ்கருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கதிர் காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன்பின்னர் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

தொற்று உறுதி

நேற்று மாலையில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானதில் போது பாஸ்கர் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story