திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டனர்


திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 5 Sept 2020 3:15 AM IST (Updated: 5 Sept 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

செய்யூர் அருகே திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த புத்திரன் கோட்டை கிராமத்தில் அரசு நிலம் உள்ளது. அந்த பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு 51 திருநங்கைகளுக்கு நிலம் ஒதுக்கி வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறி நேற்று செய்யூர் தாசில்தார் ராஜேந்திரன், துணை தாசில்தார்கள் வெங்கடேசன், புத்தியப்பன், செய்யூர் தலைமையிடத்து தலைமை நில அளவர் மகாலட்சுமி மற்றும் சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி, மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி என வருவாய்த்துறை, போலீசார் அடங்கிய குழுவினர் நில அளவீடு செய்வதற்காக அங்கு சென்றனர்.

முற்றுகை

இதை அறிந்த கிராம மக்கள் வருவாய்த்துறை மற்றும் போலீசாரை முற்றுகையிட்டனர். திருநங்கைகளுக்கு அங்கு இடம் ஒதுக்கக் கூடாது என்று மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அந்த இடத்தை வருவாய்த்துறையினர் திருநங்கைகளுக்கு ஒதுக்கி உள்ளனர். கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலத்தை திருநங்கைகளுக்கு ஒதுக்கக் கூடாது என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யூர் தாசில்தார் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நில அளவீட்டு பணியை நிறுத்தி வைத்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story