செங்கோட்டையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்


செங்கோட்டையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 5 Sept 2020 3:57 AM IST (Updated: 5 Sept 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

செங்கோட்டை,

செங்கோட்டை-சுரண்டை இலத்தூர் ரோடு பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் சிலர் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் வழி தவறி வந்ததாக கூறி, அழுது தவித்து கொண்டிருந்தான். அவனிடம் அப்பகுதியினர் விசாரித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை, அந்த சிறுவனிடம் விசாரித்தார்.

பின்னர் அந்த சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து அவனிடம் போலீசார் அன்பாக பேசி விசாரித்தனர். அப்போது அந்த சிறுவன் தனது பெயர் கனகவேல் என்றும், தந்தையின் பெயர் சண்முகவேல் என்றும் கூறினார். ஆனால் தனக்கு எந்த ஊர்? என்று சொல்ல தெரியவில்லை.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

இதுகுறித்து போலீசார் தங்களது ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு விசாரித்தனர். இதில் சிறுவன் கனகவேலின் பெற்றோர், செங்கோட்டை மேலூர் பாண்டியர் கீழ தெருவில் வசிப்பது தெரிய வந்தது. இதற்கிடையே சிறுவனை காணாததால், பெற்றோர் பதறியவாறு தேடி அலைந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து, செங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

அப்போது குறும்பு செய்ததை தந்தை சண்முகவேல் கண்டித்ததால், வீட்டில் இருந்து வெளியேறி சுமார்2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதாக சிறுவன் கனகவேல் தெரிவித்தான். தொடர்ந்து பெற்றோருக்கு போலீசார் அறிவுரை கூறினர். பின்னர் கனகவேலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்து வெளியேறிய சிறுவனை 4 மணி நேரத்தில் போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story