தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 Sep 2020 11:25 PM GMT (Updated: 4 Sep 2020 11:25 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தூத்துக்குடி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோன்று பொது போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்துக்குள் மட்டும் சிறப்பு ரெயில்களை இயக்க தமிழக அரசு தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில் தூத்துக்குடி உள்பட 6 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே அனுமதி அளித்து உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8-05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7-35 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. சென்னையில் இரவு 7-35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6-45 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த ரெயிலில் 21 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

முன்னேற்பாடு பணிகள்

கடந்த 5 மாதங்களாக ரெயில் சேவை முடக்கப்பட்டதால், ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முத்துநகர் ரெயிலின் பெட்டிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று காலையில் ரெயில் என்ஜினை இயக்கி, முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. ரெயில் நிலையத்திலும் பயணிகள் வரத்து அதிகம் இருக்கும் என்பதால், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. இந்த ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story