மைசூரு தாலுகாவில் சம்பவம்: வேறு சாதி வாலிபரை காதலித்த இளம்பெண் மர்மச்சாவு - ஆணவக்கொலையா? போலீஸ் விசாரணை


மைசூரு தாலுகாவில் சம்பவம்: வேறு சாதி வாலிபரை காதலித்த இளம்பெண் மர்மச்சாவு - ஆணவக்கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 6 Sept 2020 3:45 AM IST (Updated: 6 Sept 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு தாலுகாவில், வேறு சாதி வாலிபரை காதலித்த இளம்பெண் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மைசூரு,

மைசூரு தாலுகா தொட்டகானியா கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி(வயது 30). இவர் ஒப்பந்த அடிப்படையில் விவசாயத்துறை அலுவலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். மேலும் அவர் அரசு வேலைக்காக போட்டித்தேர்வுகளையும் எழுதி வந்தார். இந்த நிலையில் மீனாட்சி, வேறொரு சாதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக மீனாட்சி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவருடைய பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அவரை கொடுமைப்படுத்த தொடங்கினர். தங்களுடைய உறவுக்கார வாலிபர் ஒருவருக்கு, மீனாட்சியை திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

இதனால் மீனாட்சி வீட்டைவிட்டு வெளியேறி அதே பகுதியில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அவருடைய பெற்றோர் பயங்கர நெருக்கடி கொடுத்து வந்தனர். மேலும் அவருடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த மீனாட்சி இதுபற்றி தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவு செய்து அதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷியந்துக்கும், பெண்கள் நலத்துறையினருக்கும் அனுப்பி வைத்தார்.

அந்த வீடியோவில் தான் வேறு சாதி வாலிபரை காதலிப்பதாகவும், அதற்கு தனது பெற்றோர் ஒப்புக்கொள்ளாமல் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் கூறியிருந்தார். மேலும் தன்னை தனது பெற்றோரிடம் இருந்து காப்பாற்றி தன்னுடைய காதலனுடன் சேர்த்து வைக்குமாறு கூறியிருந்தார்.

அந்த வீடியோவை பார்த்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷியந்த், மீனாட்சியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மீனாட்சியை அவருடைய விருப்பப்படியே காதலனுடன் சேர்த்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கூறினார். அதை ஏற்றுக்கொண்டு மீனாட்சியின் பெற்றோரும் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மீனாட்சி அவருடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மைசூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மீனாட்சியின் சகோதரி மைசூரு புறநகர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் மீனாட்சியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வேறு சாதி வாலிபரை காதலித்ததால் அவரை பெற்றோர் ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story