மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து: நெல்லை மண்டலத்தில் 540 பஸ்கள் இன்று இயக்கம்


மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து: நெல்லை மண்டலத்தில் 540 பஸ்கள் இன்று இயக்கம்
x
தினத்தந்தி 7 Sept 2020 5:29 AM IST (Updated: 7 Sept 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து இன்று (திங்கட்கிழமை) மீண்டும் தொடங்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை மண்டலத்தில் 540 பஸ்கள் இயக்கப்படுகிறது.

நெல்லை,

கொரோனா பரவுதலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்வில், கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து, மண்டலங்களுக்கு உள்ளேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன் பிறகு மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்ததால், கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் மாவட்டத்துக்கு உள்ளேயே பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து ஜூன் மாதம் 30-ந்தேதி முதல் பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஊரடங்கு தளர்வு

பின்னர் ஊரடங்கு தளர்வில் கடந்த 1-ந்தேதியில் இருந்து மாவட்டங்களுக்கு உள்ளேயே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்டத்தில் மொத்தம் 1,661 பஸ்கள் உள்ளன. நெல்லை மண்டலத்தில் 900 பஸ்கள் உள்ளன.

இதில் 1-ந்தேதியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 350 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 150 பஸ்கள் நகர பஸ்கள், 200 பஸ்கள் புறநகர் பஸ்கள் ஆகும். இந்த பஸ்கள் அந்தந்த மாவட்ட எல்லைகளில் நிறுத்தப்பட்டன.

540 பஸ்கள் இயக்கம்

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மண்டலத்தில் இன்று முதல் 540 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து தென்காசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, அம்பை, பாபநாசம், திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பஸ்சில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும், முககவசம் அணிந்தவர்களை மட்டுமே பஸ்சில் ஏற்றி செல்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உடல்வெப்பநிலை பரிசோதனை

பயணிகள் கூட்டத்தை பொறுத்து பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். இரவு நேரத்திலும் பஸ்கள் இயக்கப்படும். இதையொட்டி பஸ்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளித்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் ஏறக்கூடிய அனைத்து பயணிகளுக்கும், தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகழுவப்பட்ட பிறகே பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பஸ்கள் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story