நெல்லையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் ஓடத்தொடங்கின பயணிகள் கூட்டம் அலைமோதியது


நெல்லையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் ஓடத்தொடங்கின பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 7 Sep 2020 10:43 PM GMT (Updated: 7 Sep 2020 10:43 PM GMT)

நெல்லையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் ஓடத்தொடங்கின. பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கில் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 1-ந்தேதியில் இருந்து மாவட்டத்துக்கு உள்ளேயே பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதையொட்டி வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லையில் இருந்து சென்னை, திருச்சி, ராமேசுவரம், கோவை, தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, பாபநாசம், திசையன்விளை, கயத்தாறு, தேனி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன.

அலைமோதிய கூட்டம்

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, பாபநாசம், தேனி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. காலையில் இருந்தே வெளியூர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் ஓடத் தொடங்கின. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஊட்டி, வேளாங்கண்ணி, ஓசூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அங்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சமூக இடைவெளியுடன்...

பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். அதன்படி 52 இருக்கைகள் கொண்ட அரசு பஸ்களில் 32 பயணிகளே ஏற அனுமதிக்கப்பட்டனர். பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தி, கைகழுவும் திரவத்தால் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே பஸ்சில் ஏற கண்டக்டர்கள் அனுமதித்தனர்.

நெல்லையில் இருந்து மதுரை செல்லும் ஒன் டூ ஒன் பஸ்களில் பயணம் செய்ய அதிகமான பயணிகள் காத்து இருந்தனர். இதையடுத்து அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோன்று பல்வேறு வழித்தடங்களிலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சில பஸ்களில் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு ஊழியர்கள் பஸ்சுக்குஊதுபத்தி ஏற்றி காண்பித்தனர். மேலும் சில பஸ்களின் நுழைவு வாசலில் வேப்பிலை கட்டினர்.

60 சதவீத பஸ்கள் இயக்கம்

46 இருக்கைகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் 23 பயணிகளே ஏற அனுமதிக்கப்பட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் முககவசம் அணிந்து இருந்தனர். முககவசம் அணியாத பயணிகளிடம் முக கவசம் அணியுமாறு கண்டக்டர்கள் அறிவுறுத்தினர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டலத்தில் நேற்று மட்டும் சுமார் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அதாவது சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடின.

டிக்கெட் முன்பதிவு

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு கவுண்ட்டரிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். காலை முதல் இரவு வரை கவுண்ட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்களும் வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

அங்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக வரிசையில் நின்ற நெல்லை பழைய பேட்டையை சேர்ந்த ஆனந்த் கூறியதாவது:-

வேலைக்கு செல்வதில் மகிழ்ச்சி

நான் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் என்ஜினீயராக பணியாற்றி வருகிறேன். கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரான நெல்லைக்கு வந்தேன். பின்னர் நான் வேலையில்லாமல் வீட்டில் இருந்தேன். வெளியூர்களுக்கு செல்ல பஸ் போக்குவரத்து தொடங்கியதால், நான் பணியாற்றிய நிறுவனத்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வேலைக்கு வரலாமா? என்று கேட்டேன். அவர்கள் என்னை வேலைக்கு வர சொன்னதால், புறப்பட தயாராகி விட்டேன்.

இதற்கான ஓசூர் செல்லும் பஸ்சில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்கிறேன். ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு சென்று வேலையில் சேர்ந்து விடுவேன். பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வேலைக்கு செல்வதில் மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் தென்காசியில் இருந்தும் பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story