ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது ஒரே நாளில் 117 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது ஒரே நாளில் 117 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 Sept 2020 10:05 PM IST (Updated: 8 Sept 2020 10:05 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது. மேலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 117 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி மாநகர் பகுதியில் 3 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 2 இடங்களில் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உடல் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. எனினும் மாநகர் பகுதியில் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. மாநகர் பகுதியில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

117 பேருக்கு தொற்று

இதற்கிடையே நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 842 ஆக இருந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நேற்று புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டும் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

86 பேர் வீடு திரும்பினர்

மேலும் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 18 பேருக்கும், பெருந்துறை பகுதியை சேர்ந்த 10 பேருக்கும், சித்தோடு பகுதியை சேர்ந்த 12 பேருக்கும், டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த 7 பேருக்கும், கோபி பகுதியை சேர்ந்த 6 பேருக்கும், பவானி பகுதியை சேர்ந்த 5 பேருக்கும், சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 3 பேருக்கும், பவானிசாகர் பகுதியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். மேலும் நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேரும், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த தலா ஒருவரும் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அதே நேரம் நேற்று ஒரே நாளில் 86 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,178 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 50 பேர் இறந்துள்ள நிலையில், 2,731 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

Next Story