யூரியா பற்றாக்குறை பிரச்சினைக்கு உடனே தீர்வு முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம்


யூரியா பற்றாக்குறை பிரச்சினைக்கு உடனே தீர்வு முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம்
x
தினத்தந்தி 9 Sept 2020 1:34 AM IST (Updated: 9 Sept 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

யூரியா பற்றாக்குறை பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக விவசாயிகளுக்கு உர பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் தங்களின் உழவு பணிகளை தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு யூரியா கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். உரக்கடைகளில் யூரியா இல்லை என்று விவசாயிகள் ஏமாற்றம் அடைகிறார்கள். இந்த நேரத்தில் விவசாய பணிகளுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுகிறது.

ஆனால் அரசின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி 8 லட்சத்து 95 ஆயிரத்து 221 டன் யூரியா விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 88 ஆயிரத்து 996 டன் யூரியா இருப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் தங்களுக்கு யூரியா கிடைக்கவில்லை என்று கூறி போராட்டம் நடத்துகிறார்கள். இதற்கு காரணம் என்ன?.

விவசாயிகளின் தேவை

யூரியாவை கள்ளச்சந்தையில் பதுக்கி இருக்க வேண்டும் அல்லது அரசின் இணையதளத்தில் உள்ள தகவல் தவறாக இருக்க வேண்டும் அல்லது விவசாயிகளின் தேவை அதிகரித்து இருக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக நகரங்களில் இருந்த மக்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு சென்றனர். இதனால் விவசாய பணிகளில் அதிகளவில் மக்கள் ஈடுபட்டு இருப்பார்கள்.

இதை உணர்ந்த நான், கடந்த மே மாதம், உரம் மற்றும் யூரியாவை அதிகளவில் அரசு இருப்பு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினேன். அரசின் புள்ளிவிவரங்கள்படி கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 20 சதவீதம் அதிக உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு அலட்சியமாக செயல்பட்டால் அடுத்து வரும் நாட்களில் உரத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

துப்பாக்கி சூடு

முன்பு பா.ஜனதா ஆட்சியில் உரம், யூரியாவை சரியான முறையில் வினியோகம் செய்யாததால், ஹாவேரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 விவசாயிகள் இறந்தனர். இத்தகைய மோசமான அனுபவம் இருந்தும், உரம் போன்ற முக்கியமான பிரச்சினையை சரியான முறையில் கையாளாமல் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது. அதனால் யூரியா பற்றாக்குறை பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Next Story