திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் சாலை மறியல்


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Sep 2020 12:44 AM GMT (Updated: 9 Sep 2020 12:44 AM GMT)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி நடைபெறுவதை கண்டித்தும், மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் பிரகாஷ் தலைமையில் மாவட்ட தலைவர் ஜீவானந்தன், துணைத்தலைவர் முருகன், கவிதா, மாவட்ட செயலாளர் பானுநிவேதிதா உள்பட நிர்வாகிகள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

திருவண்ணாமலைக்கு முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கலெக்டர் ஆய்வு பணிக்காக வெளியே சென்று உள்ளதால் மனு அளிக்க முடியாது என்று அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு போளூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டர் அலுவலகத்திற்குள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு வந்தனர். தொடர்ந்து அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

அப்போது அவர்கள் நாங்கள் கலெக்டரை நேரில் சென்று மனு அளித்து விட்டு தான் செல்வோம் என்றனர். சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வந்தார்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9½ கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 40 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இணையதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டு உள்ள வழிகளை தவறுதலாக கையாண்டு அரசாங்கத்தை ஏமாற்றி சிலர் விவசாயிகள் அல்லாதவர்களை இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய மோசடியாகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைத்திடவும், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story