திடீரென கனமழை பெங்களூருவில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டார்


திடீரென கனமழை பெங்களூருவில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 9 Sep 2020 8:52 PM GMT (Updated: 9 Sep 2020 8:52 PM GMT)

திடீரென கனமழை பெய்ததால் பெங்களூருவில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பார்வையிட்டார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த மழை பெய்தது. குறிப்பாக கே.ஆர்.புரம், மகாதேவபுரா, எலகங்கா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பெய்த மழையால், பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கே.ஆர்.புரம் வட்டரபாளையா பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மின்சாதன பொருட்கள் முழுவதுமாக நாசம் அடைந்தன.

ஹெண்ணூர், உளிமாவு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்று ஆறுபோல் காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் காலையில் வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாயினர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தரைதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் மூழ்கின.

பாதிப்புக்கு ஆளாயினர்

மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து, ரப்பர் படகுகள் மூலம் மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்தனர். தாசரஹள்ளி துவாரகநகர் பகுதியில் ராஜ கால்வாய் உடைந்து, அதில் இருந்து வெளியே நீர் அப்பகுதிகளை சூழ்ந்தது. வீடுகளுக்குள் புகுந்த நீரை மக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி வெளியேற்றினர். அவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாயினர்.

அதே போல் சிவானந்த சர்க்கிள், மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், விஜயநகர், பந்தரபாளையா, ஹெப்பால், மைசூரு ரோடு, பேகூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பலத்த மழை

பெங்களூருவில் கே.ஆர்.புரம் உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 வார்டுகளில் 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திடீரென அதிக மழை பெய்துள்ளதால் அங்கு சேதம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

அதுபோல் சிக்கமகளூரு, தாவணகெரே, குடகு, சித்ரதுர்கா, விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் நேற்றும் மாலை முதல் இரவு வரை பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

Next Story