வில்லியனூர் அருகே பயங்கரம்: சாராயக்கடை ஊழியர் வெட்டிக் கொலை போலீசில் ஒருவர் சிக்கினார்


வில்லியனூர் அருகே பயங்கரம்: சாராயக்கடை ஊழியர் வெட்டிக் கொலை போலீசில் ஒருவர் சிக்கினார்
x
தினத்தந்தி 10 Sept 2020 3:10 AM IST (Updated: 10 Sept 2020 3:10 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே சாராயக் கடை ஊழியரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வில்லியனூர்,

புதுவை வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் ராமு(வயது 21). இவர் அங்குள்ள சாராயக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு ஒதியம்பட்டு-திருக்காஞ்சி சாலையில் சாலையோரம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ராமு அரிவாளால் வெட்டப்பட்டும், தலையில் கல்லை தூக்கிப்போட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

கேமராவில் காட்சிகள்

உடனே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ராமு கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த தனியார் கம்பெனியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிலர் ராமுவை அரிவாளால் வெட்டி கொலை செய்த காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. இதை வைத்து போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவர் சிக்கினார்

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராமுவின் அண்ணனும் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லியனூர் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இதுவரை போலீசார் குற்றவாளிகள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரின் ஆதரவாளர் வார்டு மணி என்ற ராமகிருஷ்ணன் கொலையில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதற்குள் தற்போது மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது வில்லியனூர் பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் உறையச் செய்துள்ளது.

Next Story