சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு


சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 9 Sep 2020 11:42 PM GMT (Updated: 9 Sep 2020 11:42 PM GMT)

சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து மதகு வழியாக நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த வாய்க்கால் மூலமாக சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 25 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த இந்த வாய்க்காலின் கரையோரமாக வீடுகள், கடைகள், கோவில்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வாய்க்கால் கரையோரமாக உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன.

அதன்பிறகு ரூ.3 கோடி செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் கான்கிரீட் தளம் போடப்பட்டது. மேலும், தனியார் நிதி பங்களிப்புடன் சூரம்பட்டி அணைக்கட்டும் தூர்வாரப்பட்டது. இதனால் அணைக் கட்டில் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

தண்ணீர் திறப்பு

இந்தநிலையில் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் சூரம்பட்டி அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாகவும் அணைக்கட்டு நிரம்பி பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் செல்கிறது. இதைத்தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சதீஸ்குமார் கூறியதாவது:-

நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் கடந்த ஆண்டு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வரை தண்ணீர் சென்றது. இந்த ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த பாசன பகுதிகளில் கீரை, சோளம், கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். ஒருசில விவசாயிகள் நெல் பயிரும் சாகுபடி செய்கின்றனர். அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்தை பொறுத்து 4½ மாதங்களுக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வினாடிக்கு 45 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story