வில்லியனூர் அருகே நடந்த சம்பவம்: வாலிபர் கொலையில் நண்பர் அதிரடி கைது போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


வில்லியனூர் அருகே நடந்த சம்பவம்: வாலிபர் கொலையில் நண்பர் அதிரடி கைது போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2020 2:46 AM IST (Updated: 11 Sept 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை கப்பக்கார வீதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் ராம்குமார் என்கிற ராமு (வயது 25). இவர் புதுவையில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஒதியம்பட்டு - திருக்காஞ்சி சாலையோரம் தலை சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுபற்றி புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். ராம்குமார் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதிரடியாக கைது

இதையொட்டி அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வைத்து இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ராம்குமாரை கொலை செய்தவர், அவரது நண்பரான உத்திரவாகினிபேட்டை சேர்ந்த முல்லைவளவன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராம்குமாரை கொலை செய்ததற்கான திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

குடிபோதையில் தகராறு

நேற்று முன்தினம் இரவு மணவெளி - ஒதியம்பட்டு சாலை சந்திப்பில் நின்று கொண்டிருந்த முல்லைவளவளை அங்கு வந்த ராம்குமார் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். இருவரும் ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் கோவில் அருகே சாராயம் குடித்துள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து செல்ல முயன்ற ராம்குமார் போதையில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த கல்லை எடுத்து ராம்குமார் தலையில் முல்லைவளவன் தூக்கிப்போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ராம்குமார் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முல்லைவளவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.

கொரோனா பரிசோதனை

இரவோடு இரவாக முல்லைவளவனை போலீசார் கைது செய்து கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவு வந்த பிறகு அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் துப்பு துலக்கி குற்றவாளியை பிடித்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசாருக்கு போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோர் பாராட்டினர்.

Next Story