கும்மிடிப்பூண்டி அருகே சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்


கும்மிடிப்பூண்டி அருகே சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்
x
தினத்தந்தி 11 Sept 2020 3:48 AM IST (Updated: 11 Sept 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே ஏரியில் சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள புதுவாயல் ஏரியில் சவுடு மண் குவாரி அமைத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏரியை நம்பி 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியில் ஏற்கனவே தூர்வாருதல் என்ற பெயரில் மண் வளம் சுரண்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இ்த்தகைய சூழலில், தற்போது மீண்டும் புதுவாயல் ஏரியில் சவுடு மண் குவாரி அமைக்கப்பட்டால் மண் வளம் மட்டுமன்றி விவசாயமும் பாதிக்கப்படும் என அந்த பகுதி மக்கள் புகார் கூறி கடந்த மாதம் 20-ந் தேதி மற்றும் 24 -ந்தேதி என 2 நாட்களில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் பொதுமக்களின் தொடர் எதிர்ப்புக்கு இடையே நேற்று மண் அள்ளுவதற்கு ராட்சத பொக்லைன் எந்திரங்கள் புதுவாயல் ஏரியில் கொண்டு வரப்பட்டன. மேலும் பாதுகாப்புக்காக முன்கூட்டியே அங்கு போலீசார் அதிரடியாக குவிக்கப்பட்டனர்.

இதனை அறிந்த உடன் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் தலைமையில் கிராம மக்கள் அங்கு திரண்டு தங்களது எதிர்ப்பை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து புதுவாயல்- ஆரணி சாலையில் அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் போராட்டத்தின் எதிரொலியாக ஏரியில் மண் அள்ளுவது நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகள் சிலரை கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் சார்பில் நிர்வாகிகள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை சந்திக்கப்போவதாக தெரிவித்து விட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story