கிசான் திட்டத்தில் முறைகேடு: கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்


கிசான் திட்டத்தில் முறைகேடு: கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2020 12:13 AM IST (Updated: 12 Sept 2020 12:13 AM IST)
t-max-icont-min-icon

கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. சங்க மாநில தலைவர் எஸ்.ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் உதவி கலெக்டர் விஜயாவிடம் மனு கொடுத்தனர். அதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பிரமத மந்திரியின் கிசான் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் போலியான கணக்குகள் மூலம் விவசாயிகள் அல்லாதோர் பயன்பெற்று வருவது கண்டறியப்பட்டு, தற்போது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு ஊர்களில் உள்ள விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சி.பி.ஐ. விசாரணை

எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலும் முழுமையாக ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம மந்திரியின் சீரிய திட்டத்தை சீர்குலைக்க முனைந்திடும் அதிகாரிகள் மீது முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தமிழ் விவசாயிகள் சங்கம்

தொடர்ந்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் நம்பிராஜ், மாவட்ட தலைவர் நடராஜன், அவை தலைவர் வெங்கிடசாமி, சீனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் உதவி கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் டி.ஏ.பி. யூரியா வெளிமாநிலங்களுக்கு செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில முகவர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இது பதுக்கப்பட்டு, விவசாய காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையாகும். அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம், விதைகளை விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். போலி உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் நடமாட்டத்தை வேளாண்மை துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Next Story