வருகிற 21-ந்தேதி தொடக்கம்: மாணவர்கள் விரும்பிய முறையில் தேர்வு எழுதலாம் புதுவை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை


வருகிற 21-ந்தேதி தொடக்கம்: மாணவர்கள் விரும்பிய முறையில் தேர்வு எழுதலாம் புதுவை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை
x
தினத்தந்தி 12 Sept 2020 3:35 AM IST (Updated: 12 Sept 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி தேர்வுகள் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. மாணவர்கள் விரும்பிய முறையில் தேர்வு எழுதலாம் என்று புதுவை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கல்லூரி தேர்வுகள் வருகிற 14-ந்தேதி தொடங்கி நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது. கொரோனா கால கட்டத்தில் தேர்வு அறிவிக்கப்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தேர்வுகளை தள்ளிவைக்கவேண்டும், ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் மற்றும் அதிகாரிகளை அழைத்துப் பேசினார்.

இந்தநிலையில் புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன்

பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இறுதியாண்டு தேர்வுகளை நடத்த புதுச்சேரி பல்லைக்கழகம் முடிவு செய்தது. தேர்வுகள் ஆன்லைன், ஆப்லைன் (நேரடியாக வந்து எழுதுதல்) முறைகளில் பதிவு செய்வதற்கு தகுந்தாற்போல் நடத்தப்படும்.

மாணவர்கள் எந்த முறையில் தேர்வு எழுத விரும்புகிறார்கள் என்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களை நேரடியாக சந்தித்து தெரிவிக்கவேண்டும். தேர்வுகள் வருகிற 14-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது தேதிகள் மாற்றப்பட்டு புதுவை பல்கலைக்கழக இணையதளத்தில் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 21-ந்தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வுகளை சுமூகமாக நடத்த கல்லூரி முதல்வர்கள் போதிய ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story