கொரோனாவில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்தது மிகப்பெரிய வெற்றி காஞ்சீபுரம் ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்


கொரோனாவில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்தது மிகப்பெரிய வெற்றி காஞ்சீபுரம் ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 11 Sep 2020 11:08 PM GMT (Updated: 11 Sep 2020 11:08 PM GMT)

கொரோனாவில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்தது மிகப்பெரிய வெற்றி என்றும், அரசு மீது குறைசொல்லி எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதாகவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்று வேண்டுமென்றே சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புதிய நோய்.

நாளுக்குநாள் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும், இதற்கு இன்னும் மருந்துகண்டுபிடிக்காத நிலையிலும், தமிழ்நாடு அரசின் கடும் நடவடிக்கைகள் காரணமாக, மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து, சராசரியாக 88 சதவீதம் நபர்கள் குணமடைந்துள்ளனர். இதுவே மிகப்பெரிய வெற்றி ஆகும்.

கொச்சைப்படுத்த வேண்டாம்

எவ்வளவு தான் அரசாங்கம் முயற்சி செய்தாலும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால்தான் கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். கொரோனா வைரஸ் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல, உலகையே அச்சுறுத்திக்கொண்டு வரும் ஒரு கடுமையான நோய். எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏதோ தமிழகத்தில் தான் இந்த நோய் ஏற்பட்டதைப் போலவும், தமிழகத்தில் தான் கட்டுப்படுத்த தவறியதைப் போலவும் வேண்டுமென்றே எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசின் மீது குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அது தவிர்க்கப்பட வேண்டும்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களுடைய உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம்.

தடுப்பணைகள் கட்டும் பணி

இந்த மாவட்டத்தில் உள்ள நதிகளின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்து, அதில் 2 தடுப்பணைகள் கட்டப்பட்டு, அதில் தற்பொழுது நீர் நிரம்பியிருக்கின்றன. ஒரு தடுப்பணையின் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது மற்றும் ஒரு தடுப்பணை கட்டும் பணி விரைவில் துவங்க இருக்கின்றது. எஞ்சிய 3 தடுப்பணைகள் கட்டும் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட இருக்கின்றன.

அதோடு, ஒருங்கிணைந்த நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,085 கோடி மதிப்பீட்டில் இந்தப் பகுதியில் நிறைவேற்றுவதற்கு அரசின் பரிசீலனையில் இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர் கிராமம் மற்றும் செய்யூர் வட்டம் கடலூர் கிராமத்திற்கு இடையில் பாலாற்றின் குறுக்கே ரூ.300 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கும் திட்டமும் அரசின் பரிசீலனை யில் இருக்கிறது. திருக்கழுக் குன்றம் வட்டம், உதயம்பாக்கம் கிராமம் மற்றும் மதுராந்தகம் வட்டம், படாளம் கிராமத்தில் ரூ.280 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.

ரூ.168 கோடியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம்

மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஏரியை ரூ.125 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தி மேம்படுத்தும் பணி பரிசீலனையில் இருக்கிறது. செங்கல்பட்டு வட்டத்திலுள்ள கொளவாய் ஏரியை ரூ.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. ஜி.எஸ்.டி. சாலை மற்றும் குரோம்பேட்டை, பல்லாவரம் நகரப் பகுதிகளில் ரூ.41 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புப் பணிகளுக்கான திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் நிறைவேறும்பொழுது, இந்தப் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்குத் தேவைக்கான நீர் கிடைக்கும்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ரூ.168 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ரூ.100 கோடி மதிப்பீட்டில் யோகா மையம் இந்த ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கட்டப்படவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story