ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி


ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 Sep 2020 12:57 AM GMT (Updated: 12 Sep 2020 12:57 AM GMT)

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செங்கோட்டை,

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பொது போக்குவரத்து முடங்கியது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் அரசு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. அதன்படி செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலையில் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது.

செங்கோட்டையில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரெயிலில் ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ரெயில் புறப்படுவதற்கு 1½ மணி நேரம் முன்னதாகவே ரெயில் நிலையத்துக்கு பயணிகள் வரவழைக்கப்பட்டனர்.

பயணிகள் மகிழ்ச்சி

தொடர்ந்து பயணிகளுக்கு ரெயில் நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது. பயணிகள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து ரெயிலில் பயணம் செய்தனர்.

செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயிலானது தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக சென்னைக்கு சென்றது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. பல மாதங்களுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story