பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களில், ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் பயணம்


பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களில், ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் பயணம்
x
தினத்தந்தி 12 Sep 2020 10:01 PM GMT (Updated: 12 Sep 2020 10:01 PM GMT)

பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களில் ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் பயணம் செய்து உள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரையும், நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு வரை தினமும் மெட்ரோ ரெயில்களில் 3 லட்சம் முதல் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், மெட்ரோ ரெயில் சேவைக்கு மாநில அரசு தடை விதித்து இருந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பின்னர் கடந்த 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 7-ந் தேதி மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரை தான் மெட்ரோ ரெயில் இயங்கின. நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில்கள் ஓடவில்லை.

29 ஆயிரம் பேர் பயணம்

பின்னர் 9-ந் தேதியில் இருந்து நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில்கள் இயங்கி வருகின்றன. மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டாலும் கொரோனா பீதி காரணமாக முன்பு போல பயணிகள் கூட்டம் இல்லை. குறைந்த அளவு பயணிகளே மெட்ரோ ரெயில்கள் பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களில் ஒரே நாளில் 29 ஆயிரத்து 114 பேர் பயணம் செய்தனர்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட பின்னர், ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் பயணம் செய்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் வருகை அதிகரிப்பால் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story