கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை புதுவை கலெக்டர் அருண் தகவல்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை புதுவை கலெக்டர் அருண் தகவல்
x
தினத்தந்தி 14 Sept 2020 4:04 AM IST (Updated: 14 Sept 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுவை கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அரசு கொரோனா மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் வீடுகளில் தனிமைப்படுத்தவர்களுக்கு ஐ.வி.ஆர்.எஸ். குரல்வழி மருத்துவமும், தொடர் கண்காணிப்பும் வழங்கப்படுகிறது. மேலும் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகள் வீட்டிற்கு சென்றபின் மருத்துவ அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டயாலிசிஸ் சிகிச்சை

கொரோனா தொற்று நோயாளிகளில் நீரிழிவு நோய் பாதித்து டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளவர்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு பொது மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்து கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தில் 2 டயாலிசிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கொரோனா நோயாளிகளில் தேவையானவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த வசதியை ஏற்படுத்தித் தருமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், போன்ற கொரோனா அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது துணை சுகாதார மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அல்லது 104 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story