மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீர் மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீர் மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 Sept 2020 4:30 AM IST (Updated: 15 Sept 2020 1:26 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த திடீர் மழையால், குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குளுமையான சீசன் நிலவி ரம்மியமாக இருக்கும். அதேபோன்று இந்த ஆண்டும் குற்றாலத்தில் கடந்த ஜூன் மாதம் சீசன் தொடங்கியது. பகலில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இருந்தபோதும், கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டதால், குற்றாலத்துக்கு செல்வதற்கும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்காசி பகுதியிலும் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. ஐந்தருவிக்கும் நீர்வரத்து அதிகரித்ததால், அதன் 3 கிளைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், குற்றாலத்துக்கு செல்வதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், அருவிகளில் விழும் தண்ணீரை மட்டும் பார்த்து விட்டு, அங்கு உற்சாகமாக குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதனால் குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகளும் போதிய வருமானமின்றி பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

எனவே, குற்றாலத்தில் தங்கும் விடுதிகளை திறக்கவும், அருவிகளில் குளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதி உரிமையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story