தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு தேவையில்லை சரத்குமார் பேட்டி


தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு தேவையில்லை சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 15 Sept 2020 4:22 AM IST (Updated: 15 Sept 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ‘நீட்‘ தேர்வு தேவையில்லை, என்று சேலத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.

சேலம்,

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் அதிக அளவில் இருப்பதால் தமிழகத்தில் ‘நீட்‘ தேர்வு தேவையில்லை என முதல்-அமைச்சர் முடிவெடுத்தால் சிறப்பாக இருக்கும். மாணவர்களின் தற்கொலை, அவர்கள் ‘நீட்‘ தேர்வுக்கு தயார் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. மருத்துவ தேர்வு எழுதினால்தான் டாக்டர் ஆக முடியும் என்ற நிலையில் அதற்கு முன் ‘நீட்‘ தேர்வு என்பது தேவையில்லாதது. ‘நீட்‘ விவகாரத்தில் கால அவகாசம் கேட்கலாமா? அல்லது முழுமையாக ரத்து செய்யலாமா? என்பதை தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்.

சட்டமன்ற தேர்தல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எங்கள் பயணம் சட்டமன்ற தேர்தலை நோக்கித்தான் செல்கிறது. நான் அங்கு போட்டியிட விரும்பவில்லை. மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டால் மகிழ்ச்சி அடைவேன். கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. தடுப்பூசி வந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் நிலவும் அச்சம் விலகும்.

‘நீட்‘ தேர்வு, 8 வழிச்சாலை திட்டம் வேண்டுமா? வேண்டாமா? என பொதுமக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்பிறகு அதனை அமல்படுத்தலாம். என்னை பொறுத்தவரையில் நாடு வளர்ச்சி பெற வேண்டும். பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தினால் தான் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் வளர்ச்சி அடையும்.

புதிய கல்வி கொள்கை

புதிய கல்வி கொள்கையை பொருத்தவரையில், 3-வது மொழி கட்டாயம் கிடையாது. எல்லா மொழியையும் கற்பது தவறில்லை. ஆனால் அந்த மொழியை கட்டாயமாக திணிக்கக்கூடாது. அவரவர் தாய்மொழியை முதலில் கற்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நான் அவருக்கு முன்பே கட்சி தொடங்கி 14 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். தமிழகத்தில் புதிய கட்சி ஆரம்பித்து அதை வழிநடத்தி செல்வது சாதாரண விஷயம் அல்ல. நடிகர்களுக்கு பொதுவாக கூட்டம் கூடும். ஆனால் அது வாக்கு வங்கியாக மாறுமா? என்பது சந்தேகம். ஏனென்றால் இதை நான் பல தேர்தல்களில் சந்தித்துள்ளேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

சட்டம்-ஒழுங்கு

அதனை தொடர்ந்து அவரிடம், இன்னும் 8 மாதங்களில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதாகவும், ஆட்சிக்கு வந்தால் ‘நீட்‘ தேர்வை ரத்து செய்வோம், 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறியுள்ளார்களே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து சரத்குமார் கூறுகையில், தி.மு.க. வந்தால் தானே?. மக்கள் நினைத்தால் மாற்றம் உருவாகும். அடுத்து ஆட்சிக்கு யார் வர வேண்டும்? யார் வரக்கூடாது? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகம் முழுவதும் கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக அக்டோபர் மாதம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளேன், என்றார்.

Next Story