நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருவந்தூர் கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருவந்தூர் கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருவந்தூர் கிராம மக்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் ஒருவந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைலாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர் அருணாவின் கணவர் செல்ல.ராசாமணியின் தலையீடு ஊராட்சி நிர்வாகத்தில் இருப்பதாகவும், தனது மனைவிக்கு ஓட்டுபோடாத நபர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் மெகராஜை சந்தித்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்தனர். இதற்கிடையே ஊரடங்கை மீறி அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ததாக அவர்கள் மீது நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலையிடுவது இல்லை

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அருணாவின் கணவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான செல்ல.ராசாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. எப்போது ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றாலும் செயலாளர் அறையில் தான் அமருவேன். ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவது இல்லை. எனது மனைவி மக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலின் போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைலாசத்தின் தாயார் நாச்சம்மாள் எனது மனைவியிடம் தோல்வியை தழுவினார். அந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

குஞ்சாயூர் மயானத்திற்கு செல்லும் பாதையை அளவீடு செய்ய அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். அதன்பேரிலேயே ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் எனது தலையீடு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story