மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் காலண்டர்-டைரிகளுக்கு தடை விதிக்க கூடாது காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் காலண்டர்-டைரிகளுக்கு தடை விதிக்க கூடாது காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 Sep 2020 2:30 AM GMT (Updated: 15 Sep 2020 2:30 AM GMT)

மத்திய, அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த காலண்டர், டைரிகளுக்கு தடை விதிக்காமல் வழக்கம் போல் வழங்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சிவகாசி,

சிவகாசி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் பைபாஸ் வைரம் தலைமை தாங்கினார். பேராபட்டி சவுந்திரபாண்டியன் முன்னிலை வகித்தார். முருகன் யாதவ் வரவேற்றார். கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டன. தேர்தலுக்கு முன்னர் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் முன்னணியினர் ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு மத்திய அரசு சார்பில் கடந்த காலங்களில் காலண்டர் மற்றும் டைரி வழங்கப்பட்டது. தற்போது டிஜிட்டல் முறையை காரணம் காட்டி இந்த முறைக்கு தடை விதித்துள்ளது. இதனால் ஏராளமான அச்சகங்களுக்கு வழக்கமாக வரும் வேலை வாய்ப்பு குறையும். இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். வழக்கம்போல் காலண்டர் மற்றும் டைரிகளை தயார் செய்து அரசு அலுவலகங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.

மோசமான சாலை

சிவகாசி-நாரணாபுரம் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசி பகுதியில் உள்ள பல ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடிக்கிறது.

அங்கு வாருகால், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். நாரணாபுரம் பகுதியில் ஒரு காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கொண்டல் சாமி நாயுடு, பள்ளப்பட்டி முத்துசெல்வம், பிரான்சீஸ், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story