முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம்


முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2020 3:08 AM GMT (Updated: 15 Sep 2020 3:08 AM GMT)

அரசு புறம்போக்கு நிலத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்துசெய்யக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் புத்திராம்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் காட்டுப்பகுதியில் ஆவிக் கார முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அரசு நீர்நிலை புறம்போக்கு வழியாக பாதை செல்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாதை வழியாகத்தான் கிராம மக்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அரசு நீர்நிலை புறம்போக்கு இடத்தை முறைகேடாக தனிநபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதையடுத்து நீர்நிலை புறம்போக்கு இடத்தில் முறைகேடாக தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும், பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புத்திராம்பட்டி கிராம மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தின் கதவுகளை மூடினார்கள்.

வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 100 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

Next Story