வேலூரில் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு


வேலூரில் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 Sept 2020 10:28 AM IST (Updated: 15 Sept 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை திருடிச்சென்றுவிட்டனர்.

வேலூர்,

வேலூர் கொணவட்டம் பகுதியை சேர்ந்தவர் சிராஜ். வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய சகோதரியின் வீடும் கொணவட்டத்தில் உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிராஜ் வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி பாத்திமாவுடன், சகோதரியின் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டுக்கு வந்தார். வீட்டை திறந்துகொண்டு உள்ளே சென்றபோது படுக்கையறையின் கதவு திறக்கப்பட்டு கிடந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள பீரோவும் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவில் வைத்திருந்த நகை- பணம் இருக்கிறதா என பார்த்தார்.

நகை-பணம் திருட்டு

அப்போது பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது சிராஜ் வீட்டின் அருகில் உள்ள பாழடைந்த வீட்டின் வழியாக மர்மநபர்கள் சிராஜ் வீட்டுக்குள் புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story