செம்பட்டி அருகே ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி 60 கிராம விவசாயிகள் சாலை மறியல்


செம்பட்டி அருகே ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி 60 கிராம விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Sept 2020 1:05 PM IST (Updated: 16 Sept 2020 1:05 PM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி 60 கிராம விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செம்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் ராஜவாய்க்கால் வழியாக ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து ஏற்படும். இந்த ராஜவாய்க்கால் தண்ணீர் செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், போடிக்காமன்வாடி, சித்தரேவு, செங்கட்டான்பட்டி உள்ளிட்ட 60 கிராம மக்களின் குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ராஜவாய்க் காலுக்கு வந்த தண்ணீரை கடந்த சில தினங்களுக்கு முன்பு குடகனாற்றிற்கு திருப்பி விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜவாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் சுவரொட்டிகளை ஒட்டினர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் மனு அளித்தனர். ஆனால் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை.

விவசாயிகள் சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த 60 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திண்டுக்கல்-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சித்தையன்கோட்டை பிரிவு என்னுமிடத்தில் நேற்று காலை 10 மணிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன், செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், திண்டுக்கல் சப்-கலெக்டர் உமா, ஆத்தூர் தாசில்தார் பவித்ரா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டால் தான் கலைந்து செல்வோம். மாவட்ட கலெக்டர், உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் எனக்கூறினர். இந்த போராட்டம் மதியம் 2 மணி வரை நீடித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளை (இன்று) ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து கலைந்து சென்றனர். போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story