மாணவ -மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்


மாணவ -மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 16 Sep 2020 10:15 PM GMT (Updated: 2020-09-17T02:37:27+05:30)

கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

ஈரோடு,

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ -மாணவிகளுக்கு எந்த வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவ -மாணவிகள் விண்ணப்ப படிவங்களை தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெறும் மாணவ -மாணவிகள் வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் புதுப்பித்து கொள்ள வேண்டும். புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். மாணவ -மாணவிகள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்கு முன்பும், டிசம்பர் மாதம் 16-ந்தேதியில் தொடங்கும் புதியதிற்கான விண்ணப்பங்களை வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதிக்கு முன்பும் இணையதளம் மூலம் கேட்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் www.tn.gov.in/bcmbcdept என்ற அரசு இணையதளத்தில் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் 5-ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story