புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்குகிறது


புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 17 Sep 2020 12:21 AM GMT (Updated: 17 Sep 2020 12:21 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்குகிறது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்த பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருந்தது.

இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 721 ஆக உயர்ந்து 8 ஆயிரத்தை நெருங்குகிறது. ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 96 பேர் குணமடைந்ததால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,771 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கி மூடப்பட்டது

மணமேல்குடியில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் உள்ள அனைவருக்கும் சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில், வங்கி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால் வங்கி மூடப்பட்டது. மேலும் மணமேல்குடி ஊராட்சி மூலம் வங்கிக்கு செல்லும் பாதையை அடைத்து வங்கியை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

வங்கி மூடப்பட்டுள்ளதால் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

அரிமளம்

அரிமளம் ஒன்றியம் பெருங்குடி அருகே உள்ள பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண், தேக்காட்டூர் அருகே உள்ள காயாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 70 வயது ஆண், கடியாபட்டி ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த 78 வயது ஆண், ராயவரம் புது வீதியைச் சேர்ந்த 51 வயது ஆண் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்த 51 பேருக்கும், ராயவரம் பகுதியை சேர்ந்த 13 பேருக்கும், அரிமளம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த 11பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆதனக்கோட்டை

ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களான பி.மாத்தூரில் 5 வயது குழந்தை மற்றும் 38 வயது பெண்ணுக்கும், கம்மங்காட்டில் 55 வயது மற்றும் 60 வயது ஆண்கள், சம்பட்டிவிடுதியில் 38 வயது பெண், 44 வயது ஆண், சில்வர் நகரில் 55 வயது பெண் ஆகிய 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் சிகிச்சையில் இருந்த 46 பேர் குணமடைந்ததால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்தது.

Next Story