அடிப்படை வசதிகள் கேட்டு கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்கள் திடீர் போராட்டம்


அடிப்படை வசதிகள் கேட்டு கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2020 5:47 AM GMT (Updated: 17 Sep 2020 5:47 AM GMT)

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்கள் அடிப்படை வசதி கேட்டு நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கொரோனா தனி வார்டில் டாக்டர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்கள் நேற்று அடிப்படை வசதிகள் கேட்டு செவிலியர் விடுதியில் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

போராட்டம் குறித்து செவிலியர்கள் கூறியதாவது:-

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தினமும் 75-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றுகிறோம். செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதால் கூடுதலாக பணி செய்து வருகிறோம். பணி முடிந்து நாங்கள் வீட்டுக்கு செல்வதில்லை. ஓட்டலில் தங்கி தான் பணிக்கு வருகிறோம்.

இந்த நிலையில் அங்கு ஆரோக்கியமான மற்றும் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. மேலும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. எனவே எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டீன் பாலாஜிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடம், கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இதையடுத்து செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த இந்த திடீர் போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story