வேப்பந்தட்டை அருகே வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலை திருடிச்சென்ற மர்ம நபர்


வேப்பந்தட்டை அருகே வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலை திருடிச்சென்ற மர்ம நபர்
x
தினத்தந்தி 18 Sept 2020 4:24 AM IST (Updated: 18 Sept 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே வரதராஜபெருமாள் கோவில் உண்டியலை மர்ம நபர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவத்தை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெட்டி போன்ற ஒரு உண்டியல் தரையில் பதிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 5 மாதத்திற்கு முன்பு பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்த தொகை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த 5 மாதமாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை அந்த உண்டியலில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கோவிலுக்கு சாமி கும்பிட சென்றவர்கள் உண்டியல் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக கோவிலின் தர்மகர்த்தா பெருமாள்சாமியிடம் தெரிவித்தனர்.

கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள்

இதைத்தொடர்ந்து செயல் அலுவலர் யுவராஜ் கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.

அதில், முதல்நாள் இரவில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க வேட்டி, சட்டை அணிந்திருந்த ஒரு நபர் கோவிலின் மதில்சுவர் மீது ஏறி தாண்டி குதித்து கோவிலுக்குள் வருவதும், அவர் உண்டியலை தூக்கி செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது. மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள வெண்கல மணியை அவர் திருட முயற்சிப்பதும், அதை கழற்ற முடியாததால் அப்படியே விட்டுவிட்டு உண்டியலை மட்டும் தூக்கிச்செல்வதும் பதிவாகி உள்ளது.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நபரின் உருவத்தை கொண்டு, கோவில் உண்டியலை திருடிச்சென்ற நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story