பொட்டல்புதூர், குற்றாலத்தில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் - அமைச்சர், மாநில நிர்வாகி பங்கேற்பு


பொட்டல்புதூர், குற்றாலத்தில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் - அமைச்சர், மாநில நிர்வாகி பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Sept 2020 4:30 AM IST (Updated: 19 Sept 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

பொட்டல்புதூர், குற்றாலத்தில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ராஜலட்சுமி, மாநில நிர்வாகி பரமசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

கடையம்,

தென்காசி மாவட்ட அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடையம் அருகே பொட்டல்புதூரில் நேற்று நடந்தது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

மாநில இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில் பூத் வாரியாக நிர்வாகிகள் அமைக்க வேண்டும். அ.தி.மு.க. ராணுவ கட்டுப்பாட்டுடன் வளர்ந்த கட்சி. உங்கள் பணி இன்றே தொடங்கி விட்டது. இளைஞர்களே சாதனை படைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டார். அவர் பேசும்போது, அ.தி.மு.க. தொடங்கிய காலம் முதல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்து கொடுத்த வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் இளைஞர் நினைத்தால் முன்னேற்றம் காண முடியும். இளைஞர்களே இன்றே உங்கள் பணி சிறப்பாக நம் இயக்கத்திற்கு அமைய வேண்டும் என்று கூறினார்.

மாநில அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பிரபாகரன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் யூனியன் தலைவர் டி.பி.டி.பொன்னுத்துரை, ஆழ்வார்குறிச்சி நகர செயலாளர் சங்கர் மற்றும் கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன் செய்திருந்தார்.

அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் நேற்று நடைபெற்றது. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்த கூட்டத்தில் திரளாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளீர்கள். உங்களை முன்னால் அமர்த்தி அமைச்சர் மற்றும் அனைவரையும் அறிமுகம் செய்வது அ.தி.மு.க.வில் மட்டும்தான். இந்த கட்சியில் நீங்கள் இணைந்தது மக்கள் சேவை செய்வதற்காகத்தான்.

இந்தியாவிலேயே ஜனநாயகம் இருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். உங்களது உழைப்பை இதில் முதலீடு செய்யுங்கள். உயர்வு தானாக உங்களுக்கு கிடைக்கும். கொரோனா காலத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகங்களில் ஆங்காங்கே உள்ள அமைச்சர்கள் இலவசமாக உணவு வழங்கினார்கள். இந்த அரசு மக்களுக்காக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சென்னை தாய்கோ வங்கி துணைத்தலைவர் குற்றாலம் என்.சேகர், குற்றாலம் அ.தி.மு.க. செயலாளர் எம்.கணேஷ் தாமோதரன், இலஞ்சி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் காத்தவராயன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சாமிநாத பாண்டியன், மேலகரம் செயலாளர் கார்த்திக்குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் நெல்லை முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி கீழப்புலியூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி நகர செயலாளர் சுடலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழப்பாவூர் ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைப்பு ஆய்வுக்கூட்டம் ஆவுடையானூரில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்று, பூத் வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது, கட்சிப்பணி குறித்து ஆலோசனை வழங்கி பேசினர்.

மாநில இணை செயலாளர் முத்துசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். முடிவில் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் நன்றி கூறினார்.

Next Story