நெல்லையில் போலி பத்திரம் பதிவு செய்ய முயற்சி; 4 பேர் கைது


நெல்லையில் போலி பத்திரம் பதிவு செய்ய முயற்சி; 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2020 4:45 AM IST (Updated: 20 Sept 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலி பத்திரத்தை பதிவு செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் டி.வி.எஸ் நகரில் உள்ள 5½ சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது போல் பத்திரப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்காக நேற்று சிலர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அதில் ஒருவர் தன்னை மோதிலால் என்று குறிப்பிட்டு ஒரு பத்திரத்தை காட்டினார். மேலும் அவர் தனது ஆதாரமாக ஆதார் அட்டையையும் காண்பித்தார். மேலும் அந்த நிலத்தை பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுப்பதற்கான அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை இணை சார்பதிவாளர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். அப்போது மோதிலால் என்பவருக்கு சொந்தமான பத்திரம் என்று கூறப்பட்ட பழமையான பத்திரம் போலியானது என்றும், மோதிலால் என்பதற்கான அடையாள சான்றாக தாக்கல் செய்யப்பட்ட ஆதார் அட்டையும் போலியானது, அவரது பெயரில் வந்த நபரும் போலியானவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை அங்கேயே நிற்க வைத்துவிட்டு இணை சார்பதிவாளர் சண்முகசுந்தரம், பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் நைசாக நழுவி செல்ல முயன்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இவர்களிடம் இருந்து ஒரு காரும் கைப்பற்றப்பட்டது. 4 பேரையும் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆள்மாறாட்டம் முயற்சியில் ஈடுபட்டவர் கோவில்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (வயது 63) என்பதும், சாட்சியம் அளிக்க வந்திருந்தவர்கள் நெல்லை அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (50), இசக்கிபாண்டி (42) என்பதும் தெரியவந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டியை சேர்ந்த ரோஜர் என்பவர் செய்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். போலீசிடம் சிக்காமல் தப்பிச் சென்றவர், பவர் பத்திரம் எழுத வாங்க வந்திருந்த பாளையங்கோட்டை என்.ஜி.ஓ பி காலனியை சேர்ந்த கந்தசாமி என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story