கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை


கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 21 Sep 2020 12:56 AM GMT (Updated: 21 Sep 2020 12:56 AM GMT)

கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் வடக்கு வீதியை சேர்ந்தவர் பழம்பதி. மின்வாரிய முன்னாள் ஊழியரான இவரது மகன் காளிதாஸ்(வயது 34). தந்தை இறந்த பிறகு கீரமங்கலம் தெற்கு மின்வாரிய அலுவலகத்தில் லைன் ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். அலுவலகத்திலேயே தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சொந்த ஊருக்கு செல்லாமல் மின்வாரிய அலுவலகத்திலேயே தங்கி இருந்த அவர், நேற்று காலை அலுவலக அறையின் மேலே உள்ள கொக்கியில் ஒரு சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் காளிதாசின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் கீரமங்கலம் போலீசார் காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் மர்மம் இருப்பதாக புகார்

இந்தநிலையில் காளிதாசின் சாவில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது உறவினர்கள் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் தெரிவிக்கையில், காளிதாஸ் சாவில் மர்மம் உள்ளது, அவருக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிலர் மிரட்டியதாக உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆகவே, மிரட்டலுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜ் பேச்சு வார்த்தை நடத்தி, இதுதொடர்பாக போலீசில் முறையாக புகார் அளியுங்கள். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து காளிதாசின் தாயார் நாகலெட்சுமி என்கிற லட்சுமி மிரட்டலுக்கு பயந்து காளிதாஸ் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story