வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் 16 பேர் கைது


வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் 16 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2020 1:34 AM GMT (Updated: 21 Sep 2020 1:34 AM GMT)

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழுவின் அவசர கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், காவிரி உரிமை மீட்புக்குழு பொருளாளர் மணிமொழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் தேசிய முன்னணி நிர்வாகி வைகறை வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்திய நாட்டின் உழவர்களை ஒட்டுமொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு நிலம், வேளாண்மை, விளைபொருள் வணிகம் ஆகிய மூன்றையும் பன்னாட்டு மற்றும் இந்திய நாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்க மத்தியஅரசு 3 வேளாண்மை அவசர சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது.

விவசாயிகளுக்கு பாதிப்பு

இந்த சட்டங்களால் விவசாயிகள் மட்டுமின்றி மக்களும் பாதிக்கப்படுவார்கள். நெல்கொள்முதல் நிலையம், இந்திய உணவு கழகம், நியாயவிலைக்கடைகள் மூடப்படும். எனவே இந்த 3 வேளாண்மை அவசர சட்டங்களை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றினாலும் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக்காமல் கிடப்பில் போட வேண்டும்.

ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எதிரான மத்தியஅரசின் வேளாண்மை அவசர சட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதன் மூலம் சொந்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். தமிழக விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எதிராக உள்ள சட்டங்களை எதிர்த்து முதல்-அமைச்சர் குரல் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீ வைத்து எரிப்பு

பின்னர் காவிரி உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் தஞ்சை ஜி.ஏ.கெனால் சாலையில் உள்ள அலுவலகத்தில் இருந்து மணியரசன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள், வேளாண்மை அவசர சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சென்று தஞ்சை காந்திஜி சாலையில் இர்வீன்பாலம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காந்திஜிசாலையின் குறுக்கே நின்று விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்துக்கான விவசாயிகள் அவசர சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக அவசர சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டம் ஆகிய சட்டங்களின் நகல்களை காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தீ வைத்து எரித்தனர்.

இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்து அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து.

Next Story