சேலம் மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 பேர் பலி
x
தினத்தந்தி 21 Sept 2020 7:58 AM IST (Updated: 21 Sept 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 286 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 144 பேர், எடப்பாடி நகராட்சியில் 3 பேர், எடப்பாடி ஒன்றிய பகுதிகளில் 14 பேர், காடையாம்பட்டியில் 8 பேர், மகுடஞ்சாவடியில் 4 பேர், மேச்சேரியில் 2 பேர், மேட்டூர் ஒன்றியத்தில் 3 பேர், மேட்டூர் நகராட்சியில் 2 பேர், நங்கவள்ளியில் 10 பேர், ஓமலூரில் 23 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 2 பேர், தாரமங்கலத்தில் 8 பேர், வீரபாண்டியில் 16 பேர், சங்ககிரியில் 9 பேர், ஆத்தூர் நகராட்சியில் 2 பேர், ஆத்தூர் ஒன்றியத்தில் 2 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 3 பேர், பேளூரில் 5 பேர் பெத்தநாயக்கன்பாளையத்தில் 7 பேர், பனமரத்துப்பட்டியில் 7 பேர், தலைவாசலில் 2 பேர், மற்றும் வாழப்பாடி, கொளத்தூரில் தலா ஒருவர் உள்பட நேற்று ஒரே நாளில் 291 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு 263 ஆக அதிகரிப்பு

இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 ஆயிரத்து 905 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 327 பேர் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், 52 வயது ஆண், 65 வயது முதியவர் மற்றும் 78 வயது மூதாட்டி என 4 பேர் கொரோனா பாதிப்பால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் இவர்கள் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைபோல் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சேலத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, 63 வயது முதியவர் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 85 வயது முதியவர் என 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்துள்ளது.

Next Story