மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு சேறும், சகதியுமாக மாறிய மார்க்கெட்டுகள்


மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு சேறும், சகதியுமாக மாறிய மார்க்கெட்டுகள்
x
தினத்தந்தி 21 Sep 2020 4:29 AM GMT (Updated: 21 Sep 2020 4:29 AM GMT)

கோவையில் பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் மார்க்கெட்டுகள் சேறும், சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது.

கோவை,

கோவையில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதை மழை நீடித்தால் விரைவில் சிறுவாணி அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு

பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரூர் படித்துறையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து கண்டு ரசித்தனர். நொய்யல் ஆற்று தண்ணீர் குறிச்சிகுளம், உக்கடம் குளம், வெள்ளலூர் குளம், பேரூர் பெரிய குளம் உள்ளிட்ட குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம்உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

2 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் சேறும் சகதியுமாக மாறி விட்டது. எனவே காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் உணவுப் பொருளான காய்கறிகளை சகதிகளில் இறக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோல் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வாழைக்காய் மண்டி, எம்.ஜி.ஆர். மார்க்கெட் ஆகியவையும் சேறும், சகதியுமானது.

சகதியாக மாறிய சாலை

கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதிக்கு செல்லும் சாலை முழுவதும் சகதியாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டர்) விவரம்:-

விமான நிலையம் -4, மேட்டுப்பாளையம் -3, சின்கோனா -104, சின்னக்கல்லார் -80, வால்பாறை பி.ஏ.பி.- 75, வால்பாறை தாலுகா- 74, சோலையாறு -82, ஆழியாறு- 9.4, பொள்ளாச்சி- 30.2, கோவை தெற்கு- 11, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்- 13.5

Next Story