வேலூர் மாவட்டத்தில் தி.மு.க.வில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி


வேலூர் மாவட்டத்தில் தி.மு.க.வில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2020 6:12 AM GMT (Updated: 21 Sep 2020 6:12 AM GMT)

வேலூர் மாவட்டத்தில் தி.மு.க.வில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் கூறினார்.

வேலூர்,

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டார். இதில், கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் பலர் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

இலக்கு நிர்ணயம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் தி.மு.க. சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. அந்தத் திட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் 15-ந்தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 5 தொகுதிக்கு 50 ஆயிரம் பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த இலக்கை அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

போராட்டம் நடத்தப்படும்

அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் சாலை வசதி, துணை மின்நிலையம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் பேசினேன். விரைவில் அந்த மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து கொடுக்கப்படும். மலைக் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும். அல்லேரி மலையில் சாராயம் காய்ச்சுபவர்கள், போலீசாருக்கு இடையே நடந்த தகராறில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசாரை தாக்கியது தவறு. அதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அப்பாவி மக்களை தொந்தரவு செய்ய கூடாது. அல்லேரி மலையில் தற்போது சகஜ நிலை திரும்பி உள்ளது. வேலூர் மாநகராட்சி மக்களின் பிரச்சினைகளுக்காக தி.மு.க. சார்பில் கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story