தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின் பொதுமக்களுக்கு அனுமதி


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின் பொதுமக்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 22 Sept 2020 7:54 AM IST (Updated: 22 Sept 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கூட்டத்தில் விவசாயிகள், மகளிர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயிர்க்கடன், சுயதொழில் தொடங்க நிதிஉதவி, ஓய்வூதியம், உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் அளிப்பார்கள். அந்த மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

ஆனால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. இருந்தாலும் திங்கட்கிழமை தோறும் விவசாயிகள், கிராமமக்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்களுடன் வருகின்றனர். இவர்கள் அனைவரையும் கலெக்டர் நேரில் சந்திப்பது இல்லை.

கேள்வி கேட்ட போலீசார்

இவர்கள் கொண்டு வரும் மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு பகுதியில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு செல்கின்றனர். சிலர், கலெக்டர் அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்துவதுடன், மண்எண்ணெய்யை உடம்பில் ஊற்றி தற்கொலை முயற்சியிலும் ஈடுபடும் சம்பவம் திடீர், திடீரென நடக்கிறது. இதை தவிர்ப்பதற்காக கூட்டமாக யாரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என போலீசாருக்கு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அதன்படி எப்போதும் போல் இல்லாத அளவுக்கு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தியிருந்தனர். கூட்டமாக யாரையும் கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தனித்தனியாக சென்றவர்களையும் தடுத்து நிறுத்தி என்ன காரணத்திற்காக வந்தீர்கள் என கேள்விகேட்ட பிறகே அனுமதித்தனர்.

சோதனை

பெண்கள் பலர், கோரிக்கை மனுக்களுடன் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த பையை போலீசார் திறந்து பார்த்து சோதனை செய்தனர். உள்ளே இருந்த தண்ணீர் பாட்டிலையும் வெளியே எடுத்து உண்மையில் தண்ணீர் தான் இருக்கிறதா? என சோதித்து பார்த்தனர். அதுமட்டுமின்றி வேறு சில காரணங்களுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களையும் போலீசார் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். மேலும் முக கவசம் அணியாதவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்திற்குள் கூட்டமாக அனுமதிக்காததால் மனு அளிக்க வந்த கிராமமக்கள் வெயிலில் காத்து நின்றனர்.

Next Story