நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2020 2:28 AM GMT (Updated: 22 Sep 2020 2:28 AM GMT)

போதுமான அளவு கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தி தஞ்சையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல அலுவலகம் முன்பு நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 948 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்யப்பட்ட முன்பட்ட குறுவை நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. நெல்லை கொள்முதல் செய்வதற்காக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. போதிய அளவு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் தற்போது இயங்கி வரும் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக வார கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.

அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதமும் அதிகாரித்து கொண்டே இருக்கிறது. இதனால் நெல்லை குறித்த நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நல்லவன்னியன்குடிகாடு, கோவிலூர், அருள்மொழிப்பேட்டை, செண்பகபுரம், பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்தந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், நெல் மூட்டைகளுடன் தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

பின்னர் அவர்கள், நெல்லை தரையில் வாரி இறைத்து கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போதுமான அளவு கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் எனவும், 20 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முனியாண்டி, பொருளாளர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் சிவரத்னம், சுப்பிரமணியன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் அவதி

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்யப்பட்ட முன்பட்ட குறுவை நெல் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறைவான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தபட்சம் 3 ஆயிரம் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. மழை அவ்வப்போது பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாகி வருகிறது. எனவே 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும் என்றார்.

அதிகாரி கருத்து

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசனிடம் கேட்டபோது, மாவட்டத்தில் தற்போது 166 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இவற்றில் 85 கொள்முதல் நிலையங்களுக்கு மட்டுமே முழு வீச்சில் நெல் வந்து கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு தற்போது 2,500 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை 7 லட்சத்து 55 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதலுக்கு தேவையான சாக்கு போதிய அளவு கையிருப்பில் உள்ளது. விவசாயிகள் கோரிக்கை வைக்கும் பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றார்.

இதேபோல் திருவையாறு பகுதியில் தற்போது முன்பட்ட குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என புனல்வாசல் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story