பாதையை அடைத்ததால் வரைபடத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்து கிராம மக்கள் மனு


பாதையை அடைத்ததால் வரைபடத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்து கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 22 Sept 2020 8:35 AM IST (Updated: 22 Sept 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சியை அடுத்த கடமன்ரேவு கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் கிராம வரைபடத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

திண்டுக்கல்,

கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சியை அடுத்த கடமன்ரேவு கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் கிராம வரைபடத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் ஒரு மனுவை போட்டனர். அந்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கோம்பைக்காட்டில் இருந்து 38 ஓடை வழியாக வெத்தலகோடு பகுதிக்கு செல்லும் பாதையில் விளைநிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு செல்லும் பாதையை தற்போது சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து வடகவுஞ்சி கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்த போது, அரசு பதிவேட்டில் உள்ள வரைபடத்தில் நடைபாதை இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. எனவே அந்த பாதையை நீங்கள் பயன்படுத்த முடியாது என்றார். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் வெளியிடப்பட்ட கிராம வரைபடத்தில் அந்த பாதை உள்ளது. அதனை தெரிவிக்கும் வகையிலேயே அந்த வரைபட நகலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளோம். அந்த பாதையை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இவர்களை தொடர்ந்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஜ் அகமது தலைமையில் நிர்வாகிகள் சிலர் கொடுத்த மனுவில், கடந்த 17-ந்தேதி பழனியை அடுத்த ஆயக்குடியில் உள்ள பழனி பாபா நினைவிடத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் கொடிகம்பத்தை நட்டு வைத்தனர். இதுகுறித்து அறிந்த முஸ்லிம்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் அந்த கொடி கம்பத்தை அகற்றினர். ஆனால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. எனவே கொடி கம்பத்தை நட்டு வைத்தவர்களை கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். திண்டுக்கல் மேற்கு ஒன்றியம் குழவிக்கரை பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்த கிராம மக்கள் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.

Next Story