வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள 33 நிவாரண குழுக்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள 33 நிவாரண குழுக்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 22 Sept 2020 9:37 AM IST (Updated: 22 Sept 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

பருவமழையை எதிர்கொள்ள மதுரை மாவட்டத்தில் 33 நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. வெள்ளம் ஏற்படும் போது பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு தப்பி செல்வது என்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கங்களை தீயணைப்புத்துறையினர் செய்து காண்பித்தனர்.

இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தீயணைப்புத்துறையின் சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வினய், தீயணைப்புத்துறை மாவட்ட அதிகாரி கல்யாணக்குமார், உதவி அதிகாரி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. உயிர், உடைமை, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையையொட்டி நீர் சேமிப்பு பகுதிகளும், நீர் நிலைகளும் குடிமராமத்து செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

33 நிவாரணக்குழுக்கள் தயார்

கடலோர மாவட்டங்களில் நிரந்தர புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. பள்ளி கல்லூரிகளை நிவாரண முகாம்களாக மாற்றி உள்ளோம். கொரோனா காலம் என்பதால் நிவாரண முகாம்களில் சமூக இடைவெளி, கழிவறை உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக ஏற்படுத்தி உள்ளோம். மதுரை மாவட்டத்தில் 31 நிலைக்குழுக்கள், 33 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள், விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசின் புதிய விவசாய மசோதா உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story