கோவை மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கோவை மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 22 Sept 2020 9:45 AM IST (Updated: 22 Sept 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கோவை,

கோவை மாவட்டத்தில் ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இதுவரை 595 தான் அதிகபட்சமாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்திருந்தது. அதாவது கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 500 முதல் 550-க்குள் இருந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதில் கோவை அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த 29, 40 வயது ஆண் பயிற்சி மருத்துவர்கள், 29 வயது ஆண், 24, 31 வயது பெண் மருத்துவ பணியாளர்கள், அரசு தொழில்நுட்ப கல்லூரி குடியிருப்பை சேர்ந்த 29 வயது ஆண், கோவை தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 22 வயது தீயணைப்பு வீரர், பி.ஆர்.எஸ். மற்றும் காந்திபுரம் காவலர் குடியிருப்புகளை சேர்ந்த 32, 45 வயது ஆண்கள், 85 வயது மூதாட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

26,562 ஆக அதிகரிப்பு

இவர்களை தவிர கணபதியில் 28 பேர், காரமடையில் 20 பேர், சவுரிபாளையத்தில் 14 பேர், சரவணம்பட்டி, துடியலூரில் தலா 14 பேர், பீளமேடு, ஒண்டிப்புதூரில் தலா 13 பேர், ரத்தினபுரியில் 11 பேர், ராம்நகர், சிங்காநல்லூர், வடவள்ளியில் தலா 10 பேர் உள்பட 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ளது.

6 பேர் பலி

கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 44, 55 வயது பெண்கள், 70 வயது மூதாட்டி, 41 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் 68 வயது முதியவர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 94 வயது முதியவர் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள் ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 531 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்கள். கோவையில் இதுவரை 21,699 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 4,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story