கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு குறித்து நீதி கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் - சட்டசபையில் சித்தராமையா வலியுறுத்தல்


கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு குறித்து நீதி கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் - சட்டசபையில் சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Sep 2020 12:14 AM GMT (Updated: 23 Sep 2020 12:14 AM GMT)

கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடு குறித்து நீதி கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டசபையில் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சத்யநாராயணா எம்.எல்.ஏ. ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கொரோனா வைரஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடு குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குமாறு கோரினார். அதற்கு சபாநாயகர், அதை விதி எண் 69-ன் கீழ் விவாதத்திற்கு அனுமதிப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து சித்தராமையா பேசியதாவது:-

பயப்பட தேவை இல்லை

நமது நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதமே மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அளவுக்கு வைரஸ் தொற்று பரவி இருக்காது. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், மக்கள் பயப்பட தேவை இல்லை என்று கூறி தவறான தகவலை வெளியிட்டார். இதன் காரணமாக கொரோனா தேசிய அளவிலும், கர்நாடகத்தில் அதிகளவில் பரவி வருகிறது.

சர்வதேச விமானங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதமே தடை விதித்திருக்க வேண்டும். அதை மத்திய அரசு செய்யவில்லை. தப்லிக் ஜமாத் அமைப்பினர் மாநாடு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. லட்சக்கணக்கானோர் ஒரு இடத்தில் சேர்ந்து மாநாடு நடத்தினால் என்ன ஆகும்?. மார்ச் மாதத்திற்கு முன்பே ஊரடங்கை அமல்படுத்தி இருக்க வேண்டும். முகக்கவசம், செயற்கை சுவாச கருவி மற்றும் சானிடைசர் உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருந்திருக்க வேண்டும். நாட்டில் தினமும் 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

மருத்துவ உபகரணங்கள்

கொரோனா மரணத்தில் கர்நாடகம் தேசிய அளவில் 7-வது இடத்தில் உள்ளது. கொரோனா தொடர்பாக நான் கர்நாடக அரசுக்கு 20 கடிதங்கள் எழுதினேன். அதற்கு அரசு பதில் கூறவில்லை. இதை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அரசு என்று அழைக்க வேண்டுமா?. கொரோனா தடுப்பு உபகரணங்களை கர்நாடக அரசு ரூ.4,167 கோடிக்கு அரசு கொள்முதல் செய்தது. இதில் ரூ.2,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக நாங்கள் குற்றம்சாட்டினோம்.

இந்த மருத்துவ உபகரணங்கள் அதிக விலை கொடுத்து அரசு வாங்கியுள்ளது. உடல் கவச உடைகளை அரசு தொடக்கத்தில் ஒன்றுக்கு ரூ.330 விலை கொடுத்தது. அதன் பிறகு சீனாவில் இருந்து வாங்கிய கவச உடைக்கு அரசு ரூ.2,117 கொடுத்துள்ளது. அதாவது ஏறத்தாழ 7 மடங்கு அதிக விலையை அரசு கொடுத்துள்ளது. இவ்வாறு விலை கொடுத்து சீனாவில் இருந்து 3 லட்சம் கவச உடைகளை அரசு வாங்கியுள்ளது. இதை முறைகேடு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?.

செயற்கை சுவாச கருவி

இந்த குற்றச்சாட்டை கூறியதற்காக எனக்கு பா.ஜனதா வக்கீல் நோட்டீசு அனுப்பியது. அதே போல் என்.95 முகக்கவசம், செயற்கை சுவாச கருவிகள், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர், தெர்மல் ஸ்கேன், பல்ஸ்ஆக்சிமீடர் உள்ளிட்டவற்றையும் இந்த அரசு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. சில உபகரணங்களை சம்பந்தமே இல்லாத நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனங்களிடம் இருந்தும் இந்த அரசு உபகரணங்களை கொள்முதல் செய்துள்ளது.

செயற்கை சுவாச கருவியை கர்நாடக அரசு ஆரம்பத்தில் ஒன்றுக்கு ரூ.18.20 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஒதுக்கிய செயற்கை சுவாச கருவி ஒன்றின் விலை ரூ.4 லட்சம் ஆகும். தமிழக அரசு டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து செயற்கை சுவாச கருவியை ரூ.4.80 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது. அப்படி இருக்கையில் கர்நாடக அரசு மட்டும் அதிக விலை கொடுத்து மருத்துவ உபகரணங்களை வாங்கியது ஏன்?.

நீதி கமிஷன் விசாரணை

இந்த கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் நடந்துள்ள முறைகேடு குறித்து நீதி கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இதன் மூலம் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் தவறு செய்துள்ளவர்களை தண்டிக்க வேண்டும். கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது உண்மை. ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்காக முதல்-மந்திரி எடியூரப்பா ரூ.2,100 கோடிக்கு தொகுப்பு நிதி உதவி திட்டத்தை அறிவித்தார்.

இதில் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்பட்டது. அதை தவிர வேறு பிரிவுகளின் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவி சரியான முறையில் போய் சேரவில்லை. அடித்தட்டு நிலையில் உள்ள ஒரு கோடி தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதை இந்த அரசு ஏற்கவில்லை.

971 பேர் மரணம்

தேசிய அளவில் ஊரடங்கால் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பசி, பட்டினி 971 பேர் மரணம் அடைந்தனர். ஆனால் மத்திய அரசு இதுகுறித்து தங்களிடம் எந்த புள்ளி விவரமும் இல்லை என்று கூறிவிட்டது. தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டன.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story