ஈரோட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் பலி மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு தொற்று


ஈரோட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் பலி மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 23 Sep 2020 5:13 AM GMT (Updated: 23 Sep 2020 5:13 AM GMT)

ஈரோட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் இறந்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் 136 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 764 ஆக உயர்ந்தது.

இதில் நேற்று ஒரே நாளில் 165 பேர் குணமடைந்தார்கள். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 577 பேர் குணமடைந்து உள்ளார்கள். 1,110 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

4 பேர் பலி

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயருவதை போலவே பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 73 பேர் பலியாகி இருந்த நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட திண்டல், மூலப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இதில் கொரோனா பாதிப்பு காரணமாக திண்டல் பகுதியை சேர்ந்த 50 வயது நபர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலும், 78 வயது முதியவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும், மூலப்பாளையத்தை சேர்ந்த 77 வயது முதியவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், 84 வயது முதியவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆக உயர்ந்தது.

ஆஸ்பத்திரி

இதற்கிடையே ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரி கொரோனா பரிசோதனை மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்களிடம் இருந்து சளி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மகப்பேறு ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நேற்று முன்தினத்தில் இருந்து அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் கதவு நேற்று மூடப்பட்டது.

Next Story