பண்ணாரியில் போலீஸ் சோதனை சாவடியை சூறையாடிய ஒற்றை யானை


பண்ணாரியில் போலீஸ் சோதனை சாவடியை சூறையாடிய ஒற்றை யானை
x
தினத்தந்தி 23 Sep 2020 6:28 AM GMT (Updated: 23 Sep 2020 6:28 AM GMT)

பண்ணாரியில் உள்ள போலீஸ் சோதனை சாவடியை ஒற்றை யானை சூறையாடியது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பண்ணாரி சோதனை சாவடி பகுதி. இங்கு போக்குவரத்து துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை என 3 துறைகள் சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கும் வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த சோதனை சாவடிகளில் தணிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 3 மாதங்களாக ஒற்றை யானை பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் சுற்றித்திரிகிறது.

சூறையாடியது

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஒற்றை யானையானது பண்ணாரியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதிக்கு வந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், தங்களுக்கு தேவையான டீ போடுவதற்காக நாட்டு சர்க்கரையை வாங்கி சோதனை சாவடியின் பின்புறத்தில் உள்ள அறையில் வைத்திருந்தனர். இதை மோப்பம் பிடித்தபடியே சோதனை சாவடியின் பின்புறத்துக்கு அந்த யானை சென்றது. பின்னர் துதிக்கையை அறையின் உள்ளே விட்டு நாட்டு சர்க்கரையை எடுக்க முயன்றது. ஆனால் முடியவில்லை.

இதனால் யானை சோதனை சாவடியை இடித்து தள்ளியதுடன், அதில் இருந்த சிமெண்டு அட்டையிலான மேற்கூரையையும் பிடுங்கி தூக்கி எறிந்து சூறையாடிது. யானையின் அட்டகாசத்தை கண்டதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் யானையின் கண்களுக்கு படாமல் சோதனை சாவடிக்குள்ளேயே பதுங்கி கொண்டனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே இந்த யானை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த டீக்கடை ஒன்றை இடித்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.

Next Story